இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு இயக்கப்படும் மெட்ரோ ரயில்களைப் பராமரிக்கும் வகையில், மாதவரம், பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவற்றை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் பரங்கிமலை-சென்ட்ரல், விமானநிலையம்-விம்கோ நகர் ஆகிய 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை கோயம்பேட்டில் உள்ள பணிமனையில் பராமரிக்கப்படுகின்றன. விம்கோ நகரில் 20 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகளை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வழித்தடங்களில் இயங்கும் ரயில்களை பராமரிக்கும் வகையில், மாதவரம், பூந்தமல்லியில் தலா ஒரு மெட்ரோ ரயில் பணிமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றை 3 ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் பணிகள் தொடங்கின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *