நாமக்கல்: தமிழக கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை மூலநட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்களில், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அனுமன் ஜெயந்தி: நாமக்கல்லில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்குச் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் செய்யப்பட்டன.

வடைமாலை அலங்காரம்: இதனைத் தொடர்ந்து, ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சாத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். 2 ஆயிரத்து 250 கிலோ உளுந்தம் பருப்பு மாவு, 600 கிலோ நல்லெண்ணெய், 36 கிலோ மிளகு, 36 கிலோ சீரகம், 135 கிலோ உப்பு ஆகியவற்றைக் கொண்டு 13 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட வடைகள் மாலைகளாகக் கோர்க்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது.

வடை பிரசாதம்: மாலை ஆஞ்சநேயருக்கு புதிய முத்தங்கி அலங்காரம் நடைபெறும். ஆஞ்சநேயருக்கு மாலையாக சார்த்தப்பட்ட ஒரு லட்சத்து எட்டு வடைகள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதே போல தமிழகம் முழுவதும் ஆஞ்சநேயர் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சிறப்பு பூஜைகள்: அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சேலம் வரசித்தி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே சுவாமி தரிசனம் செய்தனர்.

மலர்களால் அர்ச்சனை: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் 16 அடி உயரம் கொண்ட அஞ்சலிவரத ஆஞ்சநேயருக்கு 100 கிலோ எடை கொண்ட மலர்களால் அர்ச்சனை செய்து புஷ்பாங்கி செய்யப்பட்டது.பக்தி, பணிவு, துணிவு, அறிவாற்றல், தலைமைப் பண்பிருந்தும் ராமபிரானுக்கு தொண்டனாக இருக்கும் எளிமை அனுமனின் தனிச் சிறப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *