தமிழகத்தில் மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மால்டா நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜோ – எட்டினே – அபெலா உடன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், துறையின் செயலாளர் செந்தில்குமார் மற்றும் மால்டா நாட்டை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டர்.
அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 200 இடங்கள் கிடைப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளது. மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும். பள்ளிகளிலும் தொடர்ந்து காய்ச்சல் முகாம் நடந்து வருகிறது. இதுவரை நடைபெற்ற காய்ச்சல் முகாம்களின் மூலம் 18 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
மால்டா நாட்டு பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் போடப்படும். மால்டா நாட்டு மருத்துவத் துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, இங்குள்ள செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.