camp23116வேலையில்லாத இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில் துவங்கும் வகையில் நிதியுதவியை கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு வழங்கி வருகிறது. இதற்கென அவ்வப்போது சிறப்பு முகாம்கள் நடைபெற்று அதன்மூலம் ஆயிரக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் பயன்பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சிறப்பு முகாம்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 28 வரை நடைபெற உள்ளதாகவும், இந்த முகாம்களில் தொழில் தொடங்க ரூ. 5 லட்சம் வரை நிதி உதவி அளிக்கப்படும் என்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: ஆண்டுதோறும் 5,000 இளைஞர்களுக்கு உற்பத்தி, சேவை, வியாபாரத் தொழில் தொடங்கிட கடன் வழங்கப்படுகின்றன. அதோடு, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயிற்சியிலிருந்து விலக்கு அளித்து, 25 சதவீத மூலதன மானியம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முதலீட்டாளரின் பங்கு பொதுப் பிரிவினர்க்கு 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினருக்கு (எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உள்ளிட்டோர்) 5 சதவீதமும் விழுக்காடு அளிக்கப்பட உள்ளது.

ஜனவரி 22-இல் தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் பகுதியினருக்கும், 23-இல் பெரம்பூர், அயனாவரம் பகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பயனாளிகள் தேர்வு முகாம் நடைபெறும். 25-இல் எழும்பூர், அமைந்தகரை பகுதிகளுக்கும், 27-இல் மயிலாப்பூர், வேளச்சேரி பகுதியினருக்கும், 28-இல் கிண்டி, மாம்பலம் பகுதியினருக்கு கிண்டியிலுள்ள மண்டல இணை இயக்குநர் அலுவலகம், தொழில் வணிகத் துறையில் முகாம்கள் நடைபெற உள்ளன.

குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது நிரம்பியதற்கு சான்றாக மாற்றுச்சான்றிதழ் அசல், நகல்கள், இருப்பிடச் சான்றிதழுக்கு ஆதாரமாக குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,ஆதார் அட்டை அசல், நகல்கள் ஆகியவற்றுடன் இரண்டு பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள் உள்ளிட்டவையுடன் வர வேண்டும். ஏற்கெனவே மாவட்ட தொழில் மையத்திலிருந்து விண்ணப்பம் பெற்றுச் சென்றவர்களும் முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044 – 22501620, 22501622 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary:Financial assistance for young people to start Business. Today, the special camps in Chennai.