metroசென்னையில் கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு பொதுமக்களின் ஆதரவுடன் இயங்கி வருகிறது. மேலும் தற்போது நடைபெற்று வரும் மற்ற மெட்ரோ ரயில் பாதையின் பணிகள் முடுக்கிவிடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் திட்டத்தை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கமணி நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்று சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் மெட்ரோ ரயில் குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, ‘வண்ணாரப்பேட்டையிலிருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மெட்ரோ ரயில் திட்டமே அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டதுதான். திமுக ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டப் வெறும் 3 சதவீத பணிகள்தான் நடைபெற்றன. அதிமுக ஆட்சியில் 73 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைவில் நிறைவு செய்வோம்’ என்று கூறினார்.

வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டால் அப்பகுதி மக்கள் பெரும் பயன் அடைவர் என்பதால் அந்த பகுதி மக்கள் இந்த அறிவிப்பினால் உற்சாகத்தில் உள்ளனர்.

English Summary: Washermanpet – vimko Nagar Metro project allowed the Central government: Minister Thangamani Information.