சென்னை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

39 ஏக்கர் பரப்பிலான வில்லிவாக்கம் ஏரி சென்னை குடிநீர் வாரியம் வசம் இருந்தது. மாசுபட்டுக் கிடந்த இந்த ஏரியைச் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் சென்னைமாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் மறுசீரமைப்பு பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பின்னர், திட்ட மதிப்பீடு ரூ.45 கோடியாக உயர்ந்தது. சீரமைப்பு பணிக்காகச் சென்னை குடிநீர் வாரியம் தன்வசம் 11.50 ஏக்கர் பரப்பை மட்டும் வைத்துக்கொண்டு (கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க), மீதம் உள்ள 27.50 ஏக்கர் பரப்பை மாநகராட்சி வசம் ஒப்படைத்தது.

அப்போது அந்த ஏரியின் ஆழம் ஒரு மீட்டராக மட்டுமே இருந்தது. சீரமைப்பு பணியில் சுமார் 5 மீட்டர் ஆழம் வரை தூர்வாரப்பட்டது. அதன் நீர் கொள்திறன் 70 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதில் நடைபாதை, சுற்றுச்சுவர், படகு சவாரி, வாகன நிறுத்தம், உணவகம், ஆவின் பாலகம், இசை நீரூற்று, 12டி திரையரங்கம், மோனோ ரயில் சேவை, நீர் விளையாட்டு உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகச் சென்னையில் முதல் முறையாக கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை அதிகம் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்ததொங்கு பாலம் 250 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலத்தில், ரூ.8 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக 100பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த சேவை அடுத்த ஆண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *