காவிரிக்கு போராட்டங்கள் நடைபெறும் போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்த கூடாது என பலரும் போராடி வந்த நிலையில் சென்னையில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2 ஆண்டுகள் தடைக்கு பிறகு இந்த ஆண்டு மொத்தம் 6 ஆட்டங்கள் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால் போராட்டத்தின் வீரியம் குறையும் எனவும், மக்களின் கவனம் திசை திருப்பப்படும் எனவும் கூறி ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டபடி சென்னையில் நடத்தப் போவதாக தெரிவித்தது. நேற்று சென்னையில் போட்டி நடைபெற்ற நிலையில் பல்வேறு கலவரங்களும் ஏற்பட்டன.

முன்னதாக ஐபிஎல் போட்டிகளை கேரளாவில் நடத்த தயார் என அம்மாநில அரசு ஏற்கெனவே கூறிய நிலையில் திருவனந்தபுரத்திற்கு மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20ம் தேதி நடைபெறவிருந்த போட்டிக்கு நாளை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில் அது குறித்து இதுவரை அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

English Summary: IPL matches shifted out of Chennai.