உலகம் முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதை முன்னிட்டு சென்னையிலும் பல கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள காதிபவன் கடைகளில் ஸ்ரீ கிருஷ்ண கொலு பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. கடந்த மூன்று நாட்களில் காதி பவன் கடைகளில் சுமார் ரூ.3 லட்சத்துக்கு ஸ்ரீ கிருஷ்ண கொலு பொம்மைகள் விற்பனையாகி உள்ளதாக காதி பவன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காதி பவன் மேலாளர் செல்வராஜ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காதி பவன் கொலு பொம்மைக் கண்காட்சியானது புதன்கிழமை தொடங்கியது. இதில், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் சிறப்பு கொலு பொம்மைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தொடங்கிய நாளன்று ரூ.75 ஆயிரத்துக்கு கொலு பொம்மைகள் விற்பனை ஆனது.

இதேபோல் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அலுமினியம், மரத்தூள், சந்தனம், காகிதக்கூழ் ஆகியவற்றால் ஆன ஸ்ரீ கிருஷ்ணரின் பொம்மைகளை அதிகமானோர் வாங்கிச் செல்கின்றனர். மேலும், ஸ்ரீ கிருஷ்ணருக்கு படைக்கப்படும் பலகாரங்கள், வெண்ணெய், அவல் உள்ளிட்ட சிறப்பு வகை பொருள்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கொலு பொம்மைகள் விற்பனையாகி உள்ளன.

இவ்வாறு செல்வராஜ் கூறியுள்ளார்.

English Summary : Khadi Bhavan selling Krishna Jayanthi toys for Krishna Jajanthi celebrations.