mbcசென்னையில் கொசுக்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நிலையில் இந்த பணியின் அடுத்த கட்டமாக சென்னை மாநகராட்சி மத்திய வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கொசு ஒழிப்புப் பணியில் 1.90 லட்சம் கிலோ தேவையற்ற பொருள்கள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி, மத்திய வட்டார அலுவலகத்திற்குட்பட்ட 6-ஆவது மண்டலம் முதல் 10-ஆவது மண்டலம் வரையுள்ள அனைத்து வார்டுகளிலும் செப்.1-ஆம் தேதி குடிசைப்பகுதிகளில், தீவிர சிறப்பு சுகாதாரம், துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், 232 குடிசைப்பகுதிகளில், 2,036 சுகாதாரம், துப்புரவு, சாலைப் பணியாளர்களைக் கொண்டு கொசுப்புழு உருவாகும் உபயோகமற்ற பொருள்களை அகற்றுதல், திறந்த நிலையில் உள்ள தொட்டிகளில் கொசுப்புழு தடுப்பு மருந்து தெளித்தல், குப்பைகளை அகற்றுதல், கட்டடக் கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகள் நடைபெற்றன. இந்தப் பணியில் 297 மூன்று சக்கர மிதிவண்டிகள் பயன்படுத்தப்பட்டன.

இந்தப் பணியின்போது, 6,241 கிலோ உபயோகமற்ற டயர்களும், 7,050 கிலோ உபயோகமற்ற பொருள்களும், 3,403 கிலோ பிளாஸ்டிக் பொருள்களும் அகற்றப்பட்டன. மேலும் 52,390 கிலோ குப்பைகளும், 1,20,075 கிலோ கட்டட இடிபாடுகளும் அகற்றப்பட்டன. குடிசைப்பகுதியில் வழங்கப்படும் குடிநீரின் தரம் சுகாதார ஆய்வாளர்களால் பரிசோதிக்கப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary:The elimination of mosquito breeding waste 1.90 million kg in Chennai.