கடந்த மார்ச் மாதம் சென்னை மாநகராட்சி மேயர் 2015-2016ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது அதில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து சுகாதார மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கும் அந்தந்த கோட்டங்களில் உள்ள மாநகர ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று கூறியிருந்தார். தற்போது அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் துப்புரவு தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மையங்களில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்பட பல முக்கிய உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, நோய்களுக்கு தகுந்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை மாநகர சுகாதார மையத்தில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி சுகாதார நல அதிகாரி ஜெகதீசன், துப்புரவு அலுவலர் மன்சூர் உசேன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர். முகாமில் கலந்துகொண்ட அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் ‘கையுறை பயன்படுத்த வேண்டும்’ என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர்.

மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து துப்புரவு ஊழியர்களுக்கும் அந்தந்த மண்டலம் வாரியாக மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான கால அவகாசத்தினை சுழற்சி முறையில் பணியாளர்களுக்கு வழங்கவேண்டும் என்று அந்தந்த துப்புரவு நல அதிகாரி மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர்களின் நலனை முன்னிட்டு சென்னை மாநகராட்சி எடுத்து வரும் இந்த சுகாதார மையத்தை அனைத்து பணியாளர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

English Summary : Chennai Corporation Mayor 2015-2016 budget for the year includes Medical testing for municipal Health and sanitation workers. Now its being processed.