தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பெயர் நீக்க, முகவரி மாற்றம் செய்ய, தொகுதிகள் மாற்றம் செய்ய ஆகியவற்றுக்கு ஏற்கனவே சமீபத்தில் இரண்டு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்கள் முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார். இந்த அரிய வாய்ப்பினை இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக சட்டசபை தேர்தலில் மாற்றுத்திறனாளிகளும் எளிதில் வந்து வாக்களித்துச் செல்வதற்கு தேவையான கூடுதல் வசதிகளை தேர்தல் கமிஷன் செய்து தரும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்புவரை வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க முடியும். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டாலும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டாலும் அது தனிப்பட்ட தகவலாக கொடுக்கப்படும். பெயர் அல்லது விண்ணப்பம் தவறுதலாக நீக்கப்பட்டு இருந்தால் மீண்டும் விண்ணப்பிப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

18 முதல் 19 வயதுடையவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இந்த வயதில் மொத்தம் உள்ள 26 லட்சம் இளைஞர்களில் 18 லட்சம் பேர்தான் பதிவு செய்து உள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 65 ஆயிரத்து 616 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் 99 சதவீத வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் உள்ளன. வசதி குறைவாக உள்ள வாக்குச்சாவடிகளுக்கு வசதிகளை செய்துதரும்படி தலைமைச் செயலாளரிடம் கூறி இருக்கிறோம்.

பதற்றமான, மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில், அதாவது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நேரடி ஒளிபரப்புக்கான ‘வெப்காஸ்டிங்’ தொழில்நுட்பம் கொண்டுவரப்படும். எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தல் கமிஷனால் நேரடியாக கண்காணிக்கப்படும்.

இந்த தேர்தலில் அண்ணாநகர், வேலூர், கிருஷ்ணகிரி, சேலம் வடக்கு, ஈரோடு மேற்கு, திருப்பூர் வடக்கு, கோவை வடக்கு, திண்டுக்கல், திருச்சி மேற்கு, கடலூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், விழுப்புரம், மதுரை கிழக்கு, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 17 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வி.வி.பி.ஏ.டி. என்ற ஒப்புகைச் சீட்டு எந்திரம் வைக்கப்படும். வாக்காளர் ஓட்டுப்போட்டு முடிந்ததும், யாருக்கு, எந்தச் சின்னத்துக்கு அவர் வாக்களித்தார் என்பதைக் காட்டும் விவரச் சீட்டு அந்த எந்திரத்தில் காட்டப்படும். எனவே வாக்காளர்களுக்கு தேர்தல் மீது கூடுதல் நம்பிக்கை உருவாகும்.

சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு குறித்து விரிவான ஆலோசனை கூட்டங்களை அந்தந்த மாவட்டங்களில், குறிப்பாக பின்தங்கிய மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் நடத்த வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த பகுதிகளுக்கு துணை ராணுவம் கொண்டுவரப்பட்டு, கண்காணிப்பு கேமரா தொழில்நுட்ப வசதிகள் செய்துதரப்படும். சமூகவிரோதிகள் மீது இப்போதிருந்தே மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறோம்.

English Summary: Names will be added in Voters list till 10 days before Nomination, Election Commissioner.