இளநிலை மருத்துவப் (எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்) படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 7-ஆம் தேதி கடைசி நாளாகும். ஜே.இ.இ., நெட் போன்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு தேசிய தேர்வுகள் முகமையிடம் (என்.டி.ஏ.) ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வையும் என்.டி.ஏ. நடத்துகிறது. 2019-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அறிவிப்பை என்.டி.ஏ. அண்மையில் வெளியிட்டது.

இதற்கு விண்ணப்பிக்க முன்னர் நவம்பர் 30 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், வயது உச்சவரம்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது.

விண்ணப்பிக்க வரும் 7-ஆம் தேதி கடைசி: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவிரினருக்கு வயது உச்ச வரம்பு 25 வயது என்றும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு 30 வயதாகவும் இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயித்திருந்தது. இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் முதலில் தில்லி உயர் நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வை 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் எழுத சிபிஎஸ்இ நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என கடந்த நவம்பர் 29-இல் உத்தரவிட்டது. இதன் காரணமாக, இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 30 -லிருந்து டிசம்பர் 7 ஆக நீட்டிக்கப்பட்டது. அதன்படி, நீட் தேர்வுக்கு ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வரும் 7-ஆம் தேதி கடைசி. ஆன்-லைனில் கட்டணம் செலுத்த வரும் 8-ஆம் தேதி கடைசியாகும். மேலும், விவரங்களுக்கு www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *