மார்ச் 27ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆரம்பமாகவுள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்து கொள்ளலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் அறிவித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்தப் பணியை தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, செய்தித் துறை இயக்குநர் குமரகுருபரன் ஆகியோர் இன்று தொடங்கி வைக்க உள்ளனர்.

தமிழகத்தில் 254 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தொடங்கப்பட உள்ள இந்த பொது சேவை மையங்களை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும் இரண்டு கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுசேவை மையங்களில் விண்ணப்பிக்கும் வாக்காளர்களுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ் மூலம் அவர்களின் விண்ணப்பங்கள் வந்து சேர்ந்த தகவல்கள் அனுப்பப்படும். மேலும் வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலைமையை www.elections.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இதுமட்டுமின்றி மேலும் தேவையான தகவல்களை தேர்தல் ஆணையத்துக்கு அளிப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்துக்குச் சென்று என்.வி.எஸ்.பி. என்ற சேவையையும் வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

51969 என்ற எண்ணுக்கு ECILINK space EPICNO space AAdhaar no. என்ற முறையில் குறுஞ்செய்தி அனுப்பலாம். tnvoteraadhaar@gmail.com என்ற இ-மெயிலுக்கு அனுப்பலாம். “மொபைல் அப்ளிகேஷன்’ சேவையை செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொண்டு அதைப் பயன்படுத்தலாம்.

1950, 1077 என்ற இலவச எண்களுக்கு தொலைபேசி செய்யலாம் என்று தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

English Summary: New Way to Apply for Voter ID from Tamilnadu Election Commissioner Office.