டீசல் விலை உயர்வு காரணமாக நவம்பர் 1-ம் தேதி முதல் லாரிகளுக்கான வாடகையை 25 சதவீதம் உயர்த்த சென்னை பார்சல் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சங்கத் தலை வர் ஆர்.வி.ரெட்டி, துணைத் தலைவர் கே.எஸ்.எஸ்.மணி ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்களது சங்கத்தைச் சேர்ந்த சுமார் 150 உறுப்பினர்கள் சென்னை புறநகர் மற்றும் சென்னையிலிருந்து 200 கிலோ மீட்டருக்குள் தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா உட்பட பல பகுதிகளுக்கு நாள்தோறும் பார்சல் புக்கிங் சேவை செய்து வருகிறோம். டீசல் விலை உயர்வு காரணமாக தொழிலில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தற்போது விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். இதனால் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் லாரி வாடகையை 25 சதவீதம் உயர்த்துவது என முடிவு செய்துள்ளோம். 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கட்டணம் உயர்த்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் லாரி தொழிலைச் சார்ந்து உள்ளனர். டீசல் விலை உயர்வு அனைவரது வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. லாரி வாடகைஉயர்த்தப்பட்டால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்.பொதுமக்களும் பாதிக்கப்படு வார்கள்.

எனவே, டீசல் விலை குறைப்புக்கான நடவடிக்கைகளை மத்திய,மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும். வாகனங்களின் 3-ம் நபர் விபத்துக் காப்பீடு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசு இதை மறுபரிசீலனை செய்து கட்டணத்தைக் குறைக்க வேண்டும். தமிழகத்தில் ஒப்பந்தம் காலாவதியாகியும் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

இச்சந்திப்பின்போது சங்கச் செயலாளர் டி.செல்வக்குமார், பொருளாளர் கே.புருஷோத்தமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *