கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் பல தடைகளை தாண்டி நீதிமன்றம் வரை சென்ற பின்னர் வெளியானது. இந்நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த படமான உத்தமவில்லன் திரைப்படத்திற்கும் தடை விதிக்கக்கோரி, காவல்துறை ஆணையரிடம், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு மனு அளித்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் அளித்துள்ள மனுவில், ”நடிகர் கமல்ஹாசன் மற்றும் எம்.லிங்குசாமி இணைந்து வழங்கும், ரமேஷ் அரவிந்த் இயக்கி வெளிவர இருக்கும் உத்தம வில்லன் என்ற திரைப்படத்தில் இந்து மதக் கடவுளான பெருமாளின் அவதாரங்களான தசாவதாரத்தை விமர்சித்து இருப்பதை தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம்.

பக்த பிரகலாதன், அவரது தந்தை இரணியன் உடனான உரையாடலை, வில்லு பாட்டாக ‘என் உதிரத்தின் விதை…’ என்னும் தொடங்கும் பாடல் வரியில் மிகைப்படுத்தி, பெருமாள் அவதாரத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் அமைந்துள்ளது. இது கோடிக்கணக்கான பெருமாள் பக்தர்களின் மனதை புண்படுத்தும் செயல்.

தொடர்ந்து இந்து மத எதிர்ப்பு கருத்துக்களால் தன்னை நாத்திகனாக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் நடித்த உத்தம வில்லன் படத்தை திரையிட்டால் இந்துக்களின் மனம் புண்படுத்தும் விதமாக அமையும். எனவே, அந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டுகிறோம்” எனக் குறிபிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு தற்போது மே 1ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English Summary : Vishwa Hindu Parishad files a petition to ban “Uthama Villan” film.