EPFO-01தொழிலாளர்களின் சேமிப்பான வருங்கால வைப்புநிதி எவ்வளவு இருக்கின்றது என்பதை ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதியும் செய்யப்படும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் தொழிலாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் பெறவோ, அல்லது அந்த கணக்கை முடித்துவிடவோ ஒரு தொழிலாளர் நினைத்தால் அதற்கு பல நடைமுறை வழக்கங்கள் இருந்தன. இதனால் காலதாமதம் ஆனநிலையில், தற்போது பி.எஃப். தொகைக்கான விண்ணப்பங்களைப் பெற்றவுடன் 3 மணி நேரத்துக்குள் உரியவர்களுக்கு பணம் கிடைக்கும்படியான வசதி ஆன்லைன் மூலம் விரைவில் செய்யப்படவிருக்கிறது. இது நடைமுறைக்கு வந்தவுடன் பி.எஃப். சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால் அதன்பின்னர் தங்களுக்குரிய தொகை சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கில் சேர்ப்பிக்கப்படும்.

இது குறித்து மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே.ஜலன் கூறும்போது, “ஆன்லைன் பி.எப். பண எடுப்பு முறையை அனுமதிக்க மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு எழுதியுள்ளோம். மார்ச் மாத இறுதியில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

பிஎஃப் பண எடுப்பு முறையை அறிமுகம் செய்வதற்காக சில அனுமதிகளை நாங்கள் கோரியுள்ளோம். இத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக தங்கள் ஆதார் விவரங்களைக் குறிப்பிடும் சந்தாதாரர்களின் விண்ணப்பங்களை மிக விரைவில் சரிபார்க்க உறுதி அளிக்கிறோம். இந்தக் காலக்கட்டத்தில் ஆதார் எண்கள் உள்ள பிஎப் சந்தாதாரர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு 3 நாட்களுக்குள் பணம் அளிக்கப்படும்”

இவ்வாறு கே.கே.ஜலன் கூறினார்.
English summary – The Employees Provident Fund Organisation (EPFO), to launch the PF withdrawal facility via online.