தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடித்தால் அங்குள்ள தேர்வு அறைகளில் கண்காணிப்பாளராக உள்ள ஆசிரியர்களை, பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தேர்வுத்துறை இயக்குனர் சமீபத்தில் ஆணை ஒன்றை பிறப்பித்திருந்தார்.

இந்த ஆணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பிளஸ்-2 விடைத்தாள்திருத்தும் மையங்கள் முன்பாக ஒருமணி நேரம் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள விடைத்தாள்திருத்தும் மையத்தில் மாநில அமைப்பு செயலாளர் பிரபுதாஸ் தலைமையில் நடந்தது.

தேர்வு அறைகளில் கண்காணிப்பாளராக உள்ள ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற ஆணை தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள 30 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை அச்சமடைய வைத்துள்ளதாகவும், மாணவ-மாணவிகளை உடல் ரீதியாக சோதிக்கக்கூடாது என்று விதி உள்ள நிலையில் மாணவர்கள் மறைத்துவைத்து காப்பி அடித்தால் அவர்கள் செய்யும் தவறுக்கு அங்கு பணியில் உள்ள ஆசிரியர்கள் இடை நீக்கம் செய்வது இயற்கை நியதிக்கு புறம்பானது என்றும் பிரபுதாஸ் தெரிவித்தார்.

எனவே இந்த ஆணையை திரும்ப பெறவேண்டும் என்று இந்த போராட்டத்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் மட்டும் மொத்தம் நான்கு இடங்களில் நடந்துள்ளது.

English Summary: PG Teachers goes strike for one hour to get back the suspension act during the public exams for students malpractice.