சென்னை நகரை தூய்மைப்படுத்தும் நோக்கத்தில் சென்னை மாநகராட்சி பல அதிரடி நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அதற்குரிய இடத்தில் கொட்டாமல் கண்ட இடங்களில் கொட்டும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் பிளாஸ்டி உற்பத்தியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி முதல் தடவை பிளாஸ்டிக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதமும், இரண்டாவது முறை ரூ.10 ஆயிரம் அபராதமும் தொடர்ந்து 3வது முறையும் இதே தவறை செய்தால் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரயில் நிலையம், தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் இடங்கள், கடைகள், மார்க்கெட், கோவில், தனியார் அலுவலகங்கள், வங்கிகள், பொழுதுபோக்கு மையங்கள், மால்கள் ஆகிய பகுதிகளில் விரைவில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் அமைக்கப்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.