பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ஸ்மார்ட் நகரங்கள். முதல்கட்டமாக 100 ஸ்மார்ட் நகரங்களை மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்த பட்டியலில் சென்னையும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட் சிட்டியாகப் போகும் சென்னையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வருவது என்பது குறித்து சமீபத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல சென்னைவாசிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.
நேரில் மட்டுமின்றி இணையதளம், மற்றும் இமெயில் மூலமாகவும் கருத்துகள், யோசனைகளைப் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளமான www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள பக்கத்தில் பொதுமக்கள் யோசனைகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பெரும்பாலான பொதுமக்கள் தெரிவித்த ஆலோசனைகளில் ஒன்று சூரிய மின்சாரம். நெதர்லாந்து நாட்டின் நகரங்களில் சைக்கிள்களுக்காக தனியாகப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சூரிய சக்தியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் தகடுகள் பொருத்தப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல சென்னையிலும் சைக்கிள் பாதைகளை அமைக்கும் போது சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் வகையில் அமைக்க வேண்டும் என்று பலர் யோசனை தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, சென்னையில் மோட்டார் இல்லா போக்குவரத்து கொள்கை வகுக்கப்பட்டு, மிதிவண்டிப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், மிதிவண்டிப் பாதைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. இதனால் புதிதாக மிதிவண்டிப் பாதைகள் அமைக்கும்போது சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், சென்னையில் உள்ள அனைத்து சாலைகளையும் பிளாஸ்டிக் சாலைகளாக மாற்ற வேண்டும் என்றும் தரமான சாலைகள் அமைய வேண்டுமென்றால் கமிஷன் வழங்கப்படுவதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களை உலகத் தரத்தில் புதுப்பிக்க வேண்டும். அவற்றை பராமரிக்கும் பணியைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்து, குறிப்பிட்ட சிக்னலுக்கு அதைப் பராமரிக்கும் நிறுவனத்தின் பெயரை வைக்க அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு ஆலோசனைகளைப் பொதுமக்கள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தெரிவிக்கும் யோசனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என்று மாநகராட்சித் தரப்பில் ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டுள்ளது.
English Summary: Public Speaking Tips to Smart City Chennai.