இளையதளபதி விஜய் நடித்த புலி’ படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 17 என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ளது. ஒரே நேரத்தில் புலி படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழி டிரைலர் ரிலீஸாகவுள்ளதாகவும், இந்த படத்தின் தெலுங்கு டிரைலரை பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா நடித்து வரும் 21ஆம் தேதி வெளிவரவுள்ள ‘கிக் 2′ படத்தின் இடைவேளையில் திரையிடவும் படக்குழுவினர் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் புலி’ படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான எஸ்.வி.ஆர் மீடியா என்ற நிறுவனம் தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களில் மொத்தம் 1200 தியேட்டர்களில் புலி படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அனைத்து தியேட்டர்களிலும் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தமிழ் ஹீரோ நடித்த ஒரு படத்தின் டிரைலர் இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் ஆவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ‘புலி’ படத்தின் விநியோக உரிமை வெகு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் உரிமை இதுவரை இல்லாத அளவில் இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்கா மற்றும் கனடாவில் பெரும்பாலான திரையரங்களில் ரிலீஸ் செய்தால் இந்த படத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வரை வசூல் செய்யும் வாய்ப்பு இருப்பதாக விநியோகிஸ்தர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 6.5 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக அளவில் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்த ‘பாகுபலி’ படத்தின் சாதனையை ‘புலி’ முறியடிக்க வேண்டும் என்றே நோக்கத்தில் உலகின் பல நாடுகளில் அதிகளவு தியேட்டர்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

English Summary : “Puli” sets a record of Rs.2 crore for distribution rights in United States and Canada.