சமீபத்தில் வெளியான ‘கொம்பன்’ திரைப்படத்தில் தனது குணசித்திர நடிப்பால் அனைவரையும் கவர்ந்த பிரபல நடிகர் ராஜ்கிரண், சமீபத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் கொடுக்க வந்த ஒரு பிரபல நிறுவனத்தின் விளம்பரப்படத்தில் நடிக்க மறுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் பல நகரங்களில் கிளைகள் அமைத்துள்ள பிரபல வேட்டி தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தாங்கள் புதியதாக எடுக்கவுள்ள விளம்பரப்படத்தில் நடிக்க ராஜ்கிரணை அணுகியது.

அறிமுகம் ஆன காலத்தில் இருந்து தற்பொழுது வரை வேட்டியில் மட்டுமே நடித்து வரும் ராஜ்கிரண் இந்த விளம்பரத்தில் நடித்தால் மிகப்பொருத்தமாக இருக்கும் என கருதிய அந்த விளம்ப நிறுவனம் ராஜ்கிரணுக்கு ரூ. ஒரு கோடிக்கும் மேல் சம்பளம் கொடுக்க முன்வந்தது. ஆனாலும் அந்த வேட்டி நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க ராஜ்கிரண் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து வார பத்திரிகை ஒன்றில் ராஜ்கிரண் விளக்கமளித்த போது, ‘வேட்டி என்பது ஏழை விவசாயிகள் உடுத்துகிற உடை. மிஞ்சிப்போனால் அதை அவனால் 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்கள் எனக்கே இரண்டு கோடி சம்பளம் கொடுத்தீர்கள் என்றால், அந்தக் காசையும் அவனிடம் இருந்துதானே வசூலிப்பீர்கள். அதனால்தான் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன். பதில் சொல்லாமல் போய்விட்டார்கள்!” என்றார்.

ராஜ்கிரணின் இந்தச் செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

 

English Summary: Rajkiran refuses to act in Famous Dhoti Company Ad.