இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, உறுதிப்படுத்தும் திட்டம் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த திட்டம் சென்னை மாவட்டத்திலும் மும்முரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, வாக்காளர் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை இருப்பின் அதன் நகல், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை அளிக்கும்படி கோரி வருகின்றனர். மேலும் ஆதார் அட்டை இல்லாத வாக்காளர்களும் இந்த திட்டத்தில் இணைய, தங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம்.

வாக்காளர்கள் தங்கள் விவரங்களை தேர்தல் கமிஷனின் இணையதளத்திலோ அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்புகொண்டு தங்கள் விவரங்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக நாளை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ள சிறப்பு முகாமில் வாக்காளர்கள் நேரில் சென்று விவரங்களைத் தெரிவித்துக் கொள்ளலாம்

வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் ஒரு முறைக்கு மேல் இடம் பெற்றிருந்தால், அதனை நீக்க படிவம் 7-ம், ஏற்கெனவே உள்ள பதிவுகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள படிவம் 8-ம் அளிக்க வேண்டும் என்றும்  ஒரு தொகுதிக்குள் இருப்பிட முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ-யை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் இந்தப் படிவங்களுடன் தங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண் நகலை இணைத்து, சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வாக்காளர்கள் சமர்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

English Summary: Special Camp for adding Aadhar Card No in Voter Id List in all Chennai Regional Corporation Office.