சென்னையில் கூவம், பக்கிங்காம் கால்வாய் மற்றும் அடையாறு ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றன. இவை சென்னை மாநகராட்சிக்கு உட்பட பகுதிகளில் 77.98 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடுகிறது. இந்த 3 ஆறுகளிலும் பல இடங்களில் அதிகளவு திடக்கழிவு மற்றும் கழிவுநீர் சேர்க்கப்படுகிறது. சில இடங்களில் கட்டிட இடிபாடுகளும் கொட்டப்படுகிறது. இவை நீர்நிலைகளின் நீரோட்டத்தை பாதிக்கின்றன. இவற்றில் பல்வேறு குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களிலிருந்து கழிவுநீர் திருப்பி விடப்படுகிறது. அத்துடன் லாரிகளிலும் கழிவுநீர் கொண்டுவந்து கொட்டப்படுகிறது. இதனால் இவை சென்று சேரும் கடல் நீரும், நிலத்தடி நீரும் மாசுபடுவதுடன், மாநகரில் கொசுத் தொல்லையும் அதிகரிக்கிறது. எனவே உடனடியாக இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இப்போது இதற்கு தீர்வாக இந்த நீர்நிலைகளில் கழிவுநீர் கலக்கும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கழிவுநீரை சுத்திகரித்து அதனை இந்த நீர்நிலைகளில் சேர்ப்பது, அல்லது கழிவுநீரை சுத்திகரித்து அதனை வேறு வகையில் பயன்படுத்துவது என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை பெருநகர குடிநீர், வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

சட்டசபையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் நடவடிக்கையாக, சென்னை பெருநகர குடிநீர், வடிகால் வாரியம் சார்பில் நீர்நிலை பாதைகளில் கழிவுநீர் கலக்கக்கூடிய 337 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.300 கோடி செலவில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

முதல்கட்டமாக சென்னையில் 179 இடங்களில் பணிகளை நிறைவேற்ற தமிழக அரசு ரூ.150 கோடி ஒதுக்கி உள்ளது. இதில் 79 பணிகள் எடுக்கப்பட்டு 78,573 மீட்டர் நீளத்துக்கு கழிவுநீர் குழாய்களை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல் 27,480 மீட்டர் நீளத்துக்கு கழிவுநீர் விசை குழாய்களை அகலப்படுத்தும் பணியும், 2 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

ஏற்கனவே 28 இடங்களில் உள்ள கழிவுநீர் நிலையங்களில் மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகிறது. இந்தப்பணிகள் அனைத்தும் 2016-ம் ஆண்டு ஜனவரியில் நிறைவடையும். குறிப்பாக திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, புரசைவாக்கம், அண்ணாநகர் மேற்கு, தண்டையார்பேட்டை, ராயபுரம், சவுகார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர் பகுதிகளில் உள்ள 179 இடங்களில் 51 இடங்களில் பணி முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 128 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகள் 9 மாதங்களில் முடிவடைய உள்ளது. அதன்பின்னர் நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பது முற்றிலுமாக தடுக்கப்படும்.

தற்போது கோயம்பேடு பகுதியில் தினசரி 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் மற்றும் பூங்காக்கள் பராமரிப்புக்காக சுத்திகரிக்கப்பட்ட நீர் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. நீர்நிலைகளில் லாரிகளில் கழிவுநீரை கொண்டுவந்து கொட்டுவதற்கு அனுமதி இல்லை. அவ்வாறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய கழிவுநீரை முறைப்படி சுத்திகரிப்பு நிலையங்களில் வழங்கலாம் என கூறினர்.