மழைக்கால விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் மழை எந்த மாவட்டத்தில் அதிகமாகப் பொழிகிறதோ, அங்கு முன்னெச்சரிக்கையாக விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தியுள்ளோம். அதேநேரம் பொதுத் தேர்வுகளுக்கு முன் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும். எனவே, விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்.

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து நீட், ஜேஇஇ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை நீட் தேர்வு பயிற்சிக்கு 46,216 பேரும், ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சிக்கு 29,279 பேரும், இவ்விரு தேர்வுகளுக்கான பயிற்சிக்கு 31,730 பேரும் என ஒரு லட்சத்து 7,225 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தேர்தல், தேசிய நுழைவுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பொதுத் தேர்வுக்கு 3 விதமான விருப்ப கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றை இறுதிசெய்து ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்.

ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.25,000 மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. கணிசமான பள்ளிகளில் அவ்வாறு வழங்கப்படும் சில உபகரணங்களை மாணவர்கள் ஆர்வமாக எடுத்துப் பயன்படுத்துவது இல்லை என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பொதுவான விளையாட்டுகள் எவை என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப உபகரணங்களை வாங்கித் தர அறிவுறுத்தியுள்ளோம். இதன்மூலம் பள்ளிகளுக்கு மாணவர்கள் பயன்படுத்தக் கூடிய விளையாட்டு உபகரணங்கள் மட்டுமே வழங்கப்படும் என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *