voters listகடந்த 20ஆம் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தம்-2016ன் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டது. இந்த இறுதிப்பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள மற்றும் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்த விரும்பும் வாக்காளர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பமாக தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சிறப்பு முகாம் நாட்களில் வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் தாங்கள் வாக்களிக்க உள்ள இடங்களில் வைக்கப்படும் வரைவு வாக்காளர் பட்டியல் 2015 மற்றும் துணை பட்டியல்–1 (2016)யிணை பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் 18 வயதை பூர்த்தி செய்த ஒவ்வொருவரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் இந்த சிறப்பு முகாம்களில் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். புதிதாக பெயர் சேர்க்க விரும்புபவர்கள் படிவம் 6ஐயும், நீக்கம் செய்ய விரும்புவர்கள் படிவம் 7ஐயும், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து பிழைகள் முதலியவற்றுக்கு திருத்தம் மேற்கொள்ள விரும்புவர்கள் படிவம் 8ஐம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் ஒரு பாகத்திலிருந்து மற்றொரு பாகத்திற்கு விலாசம் மாற்றி பதிவு செய்ய விரும்புபவர்கள் 8-ஏ படிவத்தையும் தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள நியமிக்கப்பட்ட இடங்களான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் முகாம் நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நேரில் சென்று படிவங்களை பெற்று பூர்த்தி செய்து பிறந்த தேதி மற்றும் குடியிருப்புக்கான ஆதார ஆவணங்களின் நகல்களுடன் அளிக்கலாம். மேலும் வாக்காளர்கள் படிவம் 6,7,8 மற்றும் 8ஏ ஆகியவற்றை www.elections.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் தமிழகத்தில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக தி.மு.க. கொடுத்த புகார் மனு மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வாக்காளர் பட்டியலை சரிபார்க்க கேட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி போலி வாக்காளர்களை நீக்க ஆன்லைன் மூலமும் நீக்க விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆலோசனை செய்ய மத்திய தேர்தல் கமிஷனர்கள் பிப்ரவரி 2வது வாரம் சென்னைக்கு வர உள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி மேலும் தெரிவித்தார்.

English Summary: Special Camp for add and Delete a Name on the Voterslist .