ஆண்கள், பெண்கள் போல திருநங்கையர்களும் சமுதாயத்தில் மதிப்பு, மரியாதையுடன் வாழும் வகையில் அரசு பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் திருநங்கையர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக திருநங்கையர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையும் வகையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு அமைத்து கொடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் அவர்களின் ஆலோசனையின்படி சென்னையில் நேற்று திருநங்கையர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதுகுறித்த தகவல்கள் அனைத்து போலீஸ் நிலைய பகுதிகளிலும் உள்ள திருநங்கையர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டதால் சுமார் 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இந்த வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர்.

அவர்களிடம் என்னென்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் உள்ளன? உங்களால் எந்த மாதிரியான வேலைகள் செய்ய முடியும்? வங்கி கடன் வழங்கினால் சுய தொழில்கள் தொடங்க முடியுமா? என்று ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்பட்டு ஒவ்வொருவரின் தகுதிக்கேற்ப வேலைகள் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு முகாமில் தொண்டு நிறுவனங்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

சிறு தொழில்கள் செய்து சொந்த காலில் நிற்க விரும்புவதாக பல திருநங்கைகள் கூறினார்கள். அவர்களிடம் அவர்கள் செய்ய விரும்பும் தொழில், அதற்கு தேவையான கடன் உதவி போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த சிறப்பு வேலை வாய்ப்பு முகாமுக்கு வந்த திருநங்கைகள் இதுகுறித்து கருத்து கூறியபோது, “பிழைப்புக்கு வழியில்லாததால் கடை கடையாக சென்று திருநங்கைகள் கையேந்தி வருவதாகவும், இந்த முகாம் மூலம் இனிமேல் அந்த நிலை மாறும் என்றும் இனி தங்களாலும் சுயமாக சம்பாதிக்க முடியும் என்றும் கூறினர்.
ஆலோசனை முடிந்ததும் மாலையில் ஒவ்வொருவருக்கும் வழங்க வேண்டிய கடன் உதவி பற்றி வங்கி அதிகாரிகள் முடிவு செய்கிறார்கள்.

English Summary: Initiative taken for Jobs Camp to Transgenders by Chennai Police Commissioner.