செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-19ஆம் கல்வி ஆண்டிற்கான பிஎஸ்சி நர்ஸிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (செப்டம்பர் 10) தொடங்கியது. 10 நாள்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

துணை மருத்துவப் படிப்புகளான பிஎஸ்சி நர்ஸிங், பி பாஃர்ம், பிஏஎஸ்எல்பி, பிபீடி, பிஓடி, பிஎஸ்சி ரேடியாலஜி, இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி கார்டியோ பல்மானரி, பெர்ஃபியூஷன் டெக்னாலஜி, பி ஆப்டம், பி கார்டியாக் டெக்னாலஜி, பிஎஸ்சி கிரிட்டிகல் கேர் டெக்னாலஜி, பிஎஸ்சி டயாலிசிஸ் டெக்னாலஜி, பிஎஸ்சி ஆபரேஷன் தியேட்டர் அனஸ்தீஷியா டெக்னாலஜி, பிஎஸ்சி பிசீஷியன்அசிஸ்டண்ட், பிஎஸ்சி ரெஸ்பிடரி தெரபி, பிஎஸ்சி ஆக்சிடெண்ட் அண்ட் எமர்ஜென்சி கேர் டெக்னாலஜி, பிஎஸ்சி மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 10ஆம் தேதி முதல் வரும் 19ஆம் தேதி வரை (10 நாள்களுக்கு) இக்கல்லூரியில் வழங்கப்படுகின்றன.

எஸ்சி, எஸ்டி பிரிவினர் தவிர இதர பிரிவினர் விண்ணப்பப் படிவத்திற்கான தொகையான ரூ.400க்கு வங்கி வரைவோலையை எடுத்து தி செக்ரடரி, செலக்ஷன் கமிட்டி, கீழ்ப்பாக்கம், சென்னை – 600 010′ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்களை எடுத்து வர வேண்டும் என்றும், விண்ணப்பங்களை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மருத்துவக் கல்லூரி அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்சி நர்ஸிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்தை செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் உஷா சதாசிவன், துணை முதல்வர் டாக்டர் அனிதா ஆகியோர் படிவங்களை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தனர். இது குறித்து கல்லூரி முதல்வர் உஷா சதாசிவன் கூறியதாவது:

பிஎஸ்சி நர்ஸிங் பட்டப் படிப்பு உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கி 10 நாள்களுக்கு நடைபெறுகிறது. செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் 50 பிஎஸ்சி நர்ஸிங் இடஒதுக்கீடு உள்ளது. தற்போது 1000 விண்ணப்பப் படிவங்கள் வந்துள்ளன. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மட்டும் ஜாதிச் சான்றிதழின் இரு நகல்களை எடுத்து வந்து விண்ணப்பப் படிவத்தை கட்டணமின்றி பெற்றுச் செல்லலாம்.

மற்ற சமூகத்தினர் ரூ. 400-க்கு வரைவோலை எடுத்து வந்து படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப விநியோகம் நடைபெறுவதை அறிந்து இதுவரை கல்லூரிகளில் சேராதவர்கள் முதல் நாளிலேயே திரண்டு வந்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோர்களுடன் வந்துள்ளனர் என்பது மருத்துவப் படிப்பில் அவர்களுக்கு ஆர்வம் இருப்பதை காட்டுகிறது என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *