இந்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் முழுமையாக கற்பிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருக்குறளை படிப்பதால் மாணவர்களின் அறிவு, ஞானம் மேம்பட்டு தீவிரவாதம், குற்றங்கள், மதுவின் பாதிப்புகள் குறையும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டு முதல் திருக்குறளின் 1330 குறட்பாக்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் எஸ்.ராஜரத்தினம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரணை செய்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.சரவணகுமார் அவர்களும் அரசு சார்பில் வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன் அவர்களும் வாதாடினர்.

முதலில் ஏ.சரவணகுமார் வாதிடும்போது, ‘மனித வாழ்க்கையின் அனைத்து கூறுகளை மற்ற எந்த இலக்கியங்களும் குறிப்பிடாத அளவில் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. உலகின் ஒட்டுமொத்த மானுடத்திற்கான படைப்பாக்கம் திறக்குறள், ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கான நெறிமுறைகள் திருக்குறளில் அடங்கியுள்ளது. கல்வி, நன்னடத்தை, விருந்தோம்பல், செய்நன்றியறிதல், வாய்மை, பெரியாரைத் துணைக்கோடல், நட்பு, நாடு, புகழ், ஒழுக்கம், அனைத்தையும் பற்றியும் தெள்ளத் தெளிவாக அறிவுறுத்தும் படைப்பு அது. திருக்குறளை மாணவர்களுக்கு விரிவான பாடத்திட்டமாக்கினால் இளம் வயதிலே, அவர்கள் மனதில் ஒழுக்கம், நன்னடத்தை மற்றும் பிற நற்குணங்கள் விதைக்கப்படும். இதனால் பாடத்திட்டத்தில் அனைத்து திருக்குறளையும் சேர்த்து, அடுத்த கல்வியாண்டில் இருந்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்’ என்று கூறினார்.,

அரசு வழக்கறிஞர் வி.ஆர்.சண்முகநாதன் வாதிடும்போது, ‘ஏற்கெனவே மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் திருக்குறள் சேர்க்கப்பட்டுள்ளது. அதை தவிர்த்து வேறு பல இலக்கியங்களும் கற்பிக்கப்படுகிறது. அரசின் கொள்கை முடிவில் இதுபோன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு பின்வருமாறு:

இந்திய அரசிலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கான வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது. தனிமனித உரிமையும், ஒன்றுபட்ட வாழ்க்கையும், தராதரமும், ஆரோக்கியமும், சமத்துவமுமு, உணவு உடை, உறைவிடம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகள் குறித்தும் அரசியலமைப்பு சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது. அதேபோல் ஒவ்வொரு குடிமகனும் கடமையுள்ளத்தோடு, சமுதாயத்தையும், நாட்டையும் காக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. ஆனால் இவற்றிற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், இளம் சிறார்களின் குற்றங்கள், விவாகரத்து வழக்குகள் ஆகியன மலிந்து போனதுடன், முறையற்ற வாழ்க்கைத்தரமும் நிலவி வருகிறது. இந்நிலையில் இளம் பிராயத்தினரை முறையான கல்வியுடன் நேர்வழிப்படுத்த முடியுமானால் அவர்கள் சிறந்த குடிமகன்களாக வருவார்கள்.

உலக மக்களுக்கு பொதுவானது என்று அறியப்படும் திருக்குறளை, மனித வாழ்வு சம்பந்தப்பட்ட அனைத்து கூறுகளையும் உள்ளடக்கி எவ்வித வாழ்க்கை வாழ வேண்டும் என வலியுறுத்தும் திருக்குறளை இளம் பிராயத்தில், குறிப்பாக 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வெறும் மனப்பாட பகுதி என்று இல்லாமல் திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் விளக்கமாக பயிற்றுவிக்க வேண்டும். இதனை வரும் கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

English Summary : Supreme court ordered that ‘Thirukural’ compulsory from this academic year from 6th – 12th.