பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சாலைகளில் வேகத்தடை ஏற்படுத்துவது வழக்கம். சாலை விபத்துக்களை தடுக்கும் நோக்கத்துடன் இந்த வேகத்தடை போடப்பட்டாலும் சிலசமயம் இந்த வேகத்தடைகளை கவனிக்காமல் விபத்து ஏற்படுவதும் உண்டு. இந்நிலையில் வேகத்தடைக்குப் பதிலாக 3D படங்களை வரையும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ”நாம் அனாவசியமான வேகத்தடைகளுக்கு பதிலாக அதனைப் போன்று 3D படங்களை சாலையில் தத்ரூபமாக வரைந்து வைக்க முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த யோசனைக்கு ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தற்போதுதான் இந்த திட்டம் பரிசிலீக்கப்பட்டு வந்த போதிலும், சுமார் 14 ஆண்டுகக்கு முன்பே அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் சாலைகளில் 3D படம் வரையும் நடைமுறை இருந்து வருகிறது. தாமதமாக கொண்டு வந்தபோதிலும் இந்த திட்டம் நல்ல திட்டம் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘எப்போதும் பரபரப்பாக காணப்படும் நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற 3D படங்களை வரைந்து விட்டால், வேகத்தடைகள் அமைக்க வேண்டிய தேவை இருக்காது என்றும், வேகமாக செல்லும் வாகனங்கள் தூரத்தில் இருந்தே இதை பார்க்க முடிவதால், வேகத்தடையால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துக்கள் நடக்கிறது. இதில், 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Nitin Gadkari idea to try 3D paintings as speed breakers.