திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை செவ்வாய்க்கிழமை பவித்ரோற்சவம் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்தப் பவித்ரோற்சவம் 15, 16-ம் நூற்றாண்டில் தொடங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. கோவிலில் வேலை பார்க்கும் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் தரிசனத்துக்காக வரும் பக்தர்களால் தெரிந்தும், தெரியாமலும் நடந்த தவறுகளால் ஏற்படும் தோ‌ஷங்களை நிவர்த்தி செய்வதற்காக பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.

கோவிலில் தொடர்ந்து நடந்து வந்த, இந்தப் பவித்ரோற்சவம் இடையே தடைப்பட்டது. 1962-ம் ஆண்டு முதல், மீண்டும் பவித்ரோற்சவம் தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. அதையொட்டி இன்று மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

நாளை காலை 9.15 மணியில் இருந்து பகல் 11 மணிவரை கோவிலில் சம்பங்கி பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், சிறப்புப்பூஜைகளும், பவித்ர பிரதிஷ்டையும் நடக்கிறது. 22-ந்தேதி பவித்ர சமர்ப்பணம், 23-ந்தேதி மகா பூர்ணாஹூதி ஆகியவை நடக்கிறது.

இந்த 3 நாட்கள் மாலை நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

பவித்ரோற்சவத்தின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகளான யாக கர்மம், புண்ணியாவதனம், ஹோமம், வைதீககாரிய கர்மங்கள் ஆகியவை அர்ச்சகர்கள், வேத விற்பன்னர்களுக்கு கோவிலின் பிரதான அர்ச்சகர் வேணுகோபாலதீட்சிதலு ஒதுக்கீடு செய்து, சில ஆலோசனைகளை வழங்குகிறார்.

வருடாந்திர பவித்ரோற்சவத்தையொட்டி கோவிலில் இன்று வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, நாளை செவ்வாய்க்கிழமை அஷ்டதல பாத பத்மாராதனை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை, 22-ந்தேதி சகஸ்ர கலசாபிஷேகம், 23-ந்தேதி திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *