ஜிசாட்-29 என்ற அதிநவீன தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) புதன்கிழமை விண்ணில் செலுத்துகிறது.

மாலை 5.08 மணிக்கு… ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து புதன்கிழமை மாலை 5.08 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 27 மணி நேர கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.50 மணிக்குத் தொடங்கப்பட்டது.

முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது: இந்த அதிக எடையைத் தாங்கிச் செல்லக்கூடிய ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் முழுவதும் உள்நாட்டிலேயே இஸ்ரோவால் உருவாக்கப்பட்டதாகும். இது 4,000 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள்களைத் தாங்கிச் சென்று, விண்ணில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தக் கூடியது. இது இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட இரண்டாவது மேம்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும்: இந்த ராக்கெட் தாங்கிச் செல்லும் ஜிசாட்-29 செயற்கைக்கோள், தொடர்ந்து 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3,423 கிலோ எடைகொண்ட உயர் தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக வடிவமைக்கப்பட்டுள்ள இதில் அதிநவீன கே.யு. மற்றும் கே.ஏ. பாண்டுகள், தகவல் தொடர்புக்கான கியூ.வி. பாண்டுகள் மற்றும் உயர் திறன் கொண்ட கேமராவும் இணைக்கப்பட்டுள்ளன.

பயன் என்ன? இந்த செயற்கைக்கோள் மூலம் இந்தியாவின் அனைத்து கிராமப்புறங்களின் தகவல்தொடர்பு வசதி தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதோடு உயர்வேக இணையதள வசதியையும் பெற முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *