சென்னை நகர மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்டமாக கோயம்பேடு-ஆலந்தூர் இடையே கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மெட்ரோ ரயில் சேவைக்கு பெரிய வரவேற்பு இருந்த போதிலும், குறுகிய பகுதியான 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடையே இந்த போக்குவரத்து தொடங்கப்பட்டதால், பயணிகளிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மெலும் பயண கட்டணமும், ரூ.10 முதல் ரூ.40 வரை நிர்ணயிக்கப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவதில்லை . இதனால், மெட்ரோ ரெயிலில் தினமும் பயணிப்போர் எண்ணிக்கை தற்போது 10 ஆயிரமாக குறைந்துள்ளது. மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு நாள் வருமானம் சுமார் ரூ.3 லட்சம் என்ற அளவிலேயே இருந்து வரும் நிலையில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், மெட்ரோ ரயில் வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் மெட்ரோ ரெயிலில் சுற்றுலா பயண அட்டை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் எடுத்து ஒருநாள் முழுவதும் விருப்பம்போல் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளாலாம் என்ற திட்டத்தை போல மெட்ரோ ரயிலில் ரூ100 மதிப்பில் சுற்றுலா பயண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரு நாளில் ரூ.100 கட்டணத்தில் பல முறை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம்.

ஏற்கனவே கடந்த 1-ந் தேதி முதல் 20 சதவீத கட்டண சலுகையுடன் 3 வகையான பயண அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதாவது, 12 முறை (7 நாட்கள் செல்லத்தக்கது), 50 முறை (30 நாட்கள் செல்லத்தக்கது), 100 முறை (60 நாட்கள் செல்லத்தக்கது) என தொடர்ந்து பயணம் செய்யும் வகையில், பணத்தை ரீ-சார்ஜ் செய்து பயன்படுத்தும் முறை அமல்படுத்தப்பட்டது. இதற்கு பயணிகளிடம் ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது, சென்னை வரும் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் கவரும் வகையில், சுற்றுலா பயண அட்டை (டூரிஸ்ட் கார்டு) நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலா பயண அட்டையை பெற ரூ.150 செலுத்த வேண்டும். இதில், ரூ.100 பயண கட்டணமாகவும், ரூ.50 திருப்பித்தரத்தக்க முன்பணமாகவும் எடுத்துக்கொள்ளப்படும். சுற்றுலா பயண அட்டை மூலம் மெட்ரோ ரெயிலில் ஒரு நாளில், ஒருவர் பல முறை பயணம் செய்யலாம். பயணம் செய்யும் அந்த ஒரு நாள் மட்டுமே செல்திறன் கொண்டது. சுற்றுலா பயண அட்டை வாங்கிய நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட வேண்டும்.

English Summary : Chennai Metro Railway introduces Tour card for Rs.100 with 1 day validity.