பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தி வருவதால் சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணியில் 3 சதவீத இட ஒதுக்கீடு, 40 சதவீத அளவில் ஊனமடைந்தவர்களுக்கு உதவித் தொகை, ஊனமுற்றோருக்கு குறைந்தபட்ச உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் ஆகியவை உள்பட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய பார்வையற்றோர் இணையம், தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள்-பாதுகாப்போர் உரிமைகளுக்கான இயக்கம், தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் எழிலகம் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

போராட்டக்காரர்கள் 450 பேர் கைது செய்யப்பட்டு, ஈ.வி.கே. சம்பத் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின்னர் நண்பகல் 12.15 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். ஆனால் விடுவிக்கப்பட்ட போராட்டக்காரர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீஸார்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீஸாரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து, ஈ.வி.கே.சம்பத் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டன.

மேலும் போராட்டக்காரர்களிடம் பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் சங்கர், இணை ஆணையர் மனோகரன் ஆகியோர் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. பின்னர் நண்பகல் 2 மணிக்கு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த தலைமைச் செயலகம் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னரே அந்த பகுதியில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.

தலைமைச் செயலரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாக திரும்பி வந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், காவல் துறை உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக, போராட்டத்தை மாலை 6.45 மணியளவில் கைவிட்டனர். இதனால், ஈ.வி.கே.சம்பத் சாலையில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து பெரும்பான்மையான நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

English Summary : Traffic in Chennai because of Differently Abled persons strike.