கடந்த 17ஆம் தேதி பெங்களூர் ரயில் ஒன்று சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட நிலையில் இன்று காலை மீண்டும் ஒரு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு காலை 7.15 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், 6.15 மணியளவில் யார்டில் இருந்து சென்ட்ரலுக்கு கொண்டு வரும் வழியில் 5 பெட்டிகள் தடம்புரண்டன. பயணிகள் இல்லாமல் காலியாக இந்த ரயில் வந்ததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியதை அடுத்து உடனடியாக டிரைவர் என்ஜினை நிறுத்தி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பெட்டிகளை தூக்கி நிலை நிறுத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. மீட்பு பணி முடிவடைந்து தண்டவாளத்தை சரி செய்யும் பணியிலும், தடம் புரண்ட பெட்டிகளை சரி செய்யும் பணியிலும் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சதாப்தி எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட தகவல் பயணிகளுக்கு தாமதமாக தெரிவிக்கப்பட்டதால் பயணிகள் ஆவேசம் அடைந்தனர். ரெயிலில் பயணம் செய்ய காத்திருந்த 500க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ரயில் எத்தனை மணிக்கு புறப்படும் என்பதை ரயில்வே அதிகாரிகள் உறுதியாக கூறாததால் காத்திருந்த பயணிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் ஒருவழியாக சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 10.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அறிவித்தபடி ரயில் புறப்படவில்லை. மீட்புப்பணிகள் அனைத்தும் முடிவடைந்து சதாப்தி ரயில் இன்று காலை 11.15 மணிக்கு புறப்பட்டு சென்றது. ரயிலின் இந்த தாமதம் காரணமாக பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் ஆகியோர் பெரும் சிரமம் அடைந்தனர்.

English Summary : Shatabdi express derailed near Chennai Central around 6.15 am today.