மார்ச் முதல் வாரத்தில் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.தமிழக போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 12வது ஊதிய ஒப்பந்தத்தை முறையாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அமைத்த 14 பேர் கொண்ட குழு தலைமையில் கடந்த 11-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 42 தொழிற்சங்கங்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன. இதனால் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை.

சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர் பிரச்னைகள் விவாதம் குறித்த சிறப்பு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கெடு விதித்தன. ஆனால், அதிகாரிகள் தேதி அறிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.

இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், 12வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி அல்லது அதற்கு பின் வேலை நிறுத்தம் செய்வது என்று உடன்பாடானது. அதன் பின்னர்அந்த நோட்டீசை, அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பர்ட் தினகரனிடம் வழங்கினர்.

English Summary: Tamil Nadu Transport unions has decided to strike on first week of March if negotiation fails.