திருச்சியில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோக்களிலும், டிஜிட்டல் மீட்டர் பொருத்தி, அரசு அறிவித்த கட்டணத்தை வசூலிக்க, வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், போலீஸார் நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தி, புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் வசூலிக்க வேண்டும் என, கடந்தாண்டு நவம்பர், 21ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

மேலும், அனைத்து ஆட்டோ ரிக்ஷா உரிமையாளர்களும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகத்தில் பதிவுச் சான்று, தகுதிச் சான்று, அனுமதி சீட்டு, காப்புச் சான்று, வாகன உரிமையாளர் குறித்த அசல் ஆவணங்களை சமர்ப்பித்து, டிசம்பர், 6ம் தேதிக்குள் புதிய கட்டண அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும், எனவும் உத்தரவிடப் பட்டது. ஆட்டோவில் மீட்டர் பொருத்த விதிக்கப்பட்டிருந்த கெடு, டிசம்பர், 20ம் தேதியுடன் முடிந்தது. இதனால், திருச்சியில் மீட்டர் பொருத்தாமல் இயக்கப்பட்ட ஆட்டோக்களுக்கு போலீஸார், அபராதம் விதித்தனர். இந்நிலையில், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மீட்டர் பொருத்தி, நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தை வசூல் செய்யும் ஆட்டோக்களை, கடந்த டிசம்பர் மாதம், அப்போதைய கலெக்டர் ஜெயஸ்ரீ துவக்கி வைத்தார்.

இருப்பினும், திருச்சியில் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள், கூடுதல் கட்டணம் கேட்பதாக, பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்துள்ளது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளும், போலீஸாரும், “ஈகோ’ பிரச்னையில் அமைதியாக உள்ளனர். இதனால், திருச்சியில் ஆட்டோவில் பயணம் செய்யும் பொதுமக்கள், அதிக கட்டணம் தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலை குறித்து மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து மற்றும் மாநகர காவல்துறை எப்பொழுது நடவடிக்கை எடுக்கும் என்று திருச்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.