சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக கம்ப்யூட்டரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வரும் ஜூன் 22 முதல் 26-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்திற்கு அமெரிக்கா செல்வதற்கான விசா பெறுவதற்கான நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்க துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவிலுள்ள கம்ப்யூட்டரில் கடந்த 9ஆம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யும் பணியில், 100-க்கும் மேற்பட்ட கணினி வல்லுநர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்பாராமல் நடந்த இந்தக் கம்ப்யூட்டர் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் விசா வழங்கும் பணிகள் பாதிகப்பட்டுள்ளது. எனவே வரும் 22ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த விசா தொடர்பான நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேர்காணலுக்கு அனுமதி பெறவிரும்பும் விண்ணப்பதாரர்கள், ஜூலை 6-ஆம் தேதிக்குப் பின் அனுமதி கோரலாம்.

விசா நேர்காணல் ரத்து தொடர்பான மற்றும் மறு நேர்காணல் அனுமதி தொடர்பான தகவல்களை ww.ustraveldocs.com/in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் பழுது நீக்கப்பட்டவுடன் தங்களின் விசா பெறுவது தொடர்பாக குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பதாரர்களுக்கு தெரியப்படுத்தப்படும். அவ்வாறு தகவல் பெறப்பட்டவுடன் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் நுழைவுஇசைவு விண்ணப்ப மையங்களுக்குச் சென்று கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களின் தற்போதைய நிலை குறித்து, www.ustraveldocs.com/in/in-loc-passportcollection.asp என்ற இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம்.
இருப்பினும், மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மனிதாபிமான நிகழ்வுக்கு முன்னுரிமை அடிப்படையில் விசா வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English Summary : Visa Interview canceled from 22nd to 26th in US embassy due to Computer malfunction.