வாக்காளர்கள் தாங்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துக் கொள்ளும் சான்றுச் சீட்டை அளிக்கும் வசதி வரும் தேர்தலில் ஒருசில தொகுதியில் ஏற்படுத்தியுள்ள நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு முதல் நடைபெறும் பொதுத் தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் இந்தியா முழுவதிலும் உள்ள வாக்காளர்களுக்கு சான்றுச் சீட்டு அளிக்கும்படி வசதி செய்து தரப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்தார்.

“தேர்தல்களை வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி பேசியதாவது:

தேர்தல் நடைமுறைகளை எளிமையாக்க தொழில்நுட்ப வசதிகளை தேர்தல் ஆணையம் திறம்பட பயன்படுத்தி வருகிறது. இதற்கு, மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களில் முன்பு நடைமுறையிலிருந்த வாக்குச் சீட்டு முறைக்கு மாற்றாக, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்ததை சிறந்த உதாரணமாக கூறலாம்.

ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எழுப்பி வந்த பல்வேறு சந்தேகங்களை நிவர்த்திச் செய்து, இந்த வாக்குப்பதிவு முறையை முழுவீச்சில் செயல்படுத்த, 20 ஆண்டுக்கு மேலாகி உள்ளது.

இருப்பினும் இந்த முறையில், ஒரு வாக்காளர் பதிவுச் செய்யும் வாக்கு, அவர் தேர்ந்தெடுக்க விரும்பும் வேட்பாளரின் வாக்குக் கணக்கில்தான் சேருகிறது என்பதை எப்படி உறுதி செய்வது? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

இதற்கு தீர்வுகாணும் நோக்கில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் பல்வேறு தேர்தல்களில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்காளர்கள் தாங்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்துக் கொள்ள, அவர்களின் பார்வைக்கு சான்றுச் சீட்டை அளிக்கும் வசதியுடன்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வரும் 2019ஆம் ஆண்டு முதல் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல்களில், நாடு முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சான்றுச் சீட்டு வசதியுடன்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

இணையவழி வாக்குப்பதிவு சாத்தியமில்லை: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, மின்னணு முறையிலான தபால் வாக்கு செலுத்தும் வசதியை ஏற்படுத்தித் தருவதற்கான தொழில்நுட்ப பணிகளை ஆணையம் மேற்கொண்டுள்ளது. அதேசமயம், பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக, இணையவழியில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்யும் வசதியை கொண்டுவருவது தற்போதைக்கு சாத்தியமில்லை’ இவ்வாறு நசீம் ஜைதி தெரிவித்தார்.

English Summary: Voters will get their chalans while voting, Chief Election Commissioner.