goldenjubileeகடந்த 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா- பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம் நேற்று சென்னை போர் நினைவு சின்னத்தில் கொண்டாடப்பட்டது. இதில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

1965ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே 17 நாட்கள் கடுமையான போர் நடந்தது. 17வது நாளில் இந்தியா அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த போர் முடிந்து நேற்றுடன் சரியாக 50 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா-பாகிஸ்தான் போரின் பொன் விழா  நேற்று சென்னை ராஜாஜி சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவினை ஒட்டி போர் நினைவு சின்னம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணிக்கு இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய தலைமை அதிகாரி ஜக்பீர் சிங் போர் நினைவு சின்னத்துக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து முப்படை அதிகாரிகள், என்.சி.சி. மாணவர்கள் ஆகியோர் போரில் உயிர் நித்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய ராணுவத்தின் தென் பிராந்திய தலைமை அதிகாரி ஜக்பீர் சிங் நிருபர்களிடம் பேசியபோது, “இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதை பாகிஸ்தான் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை பொறுத்தவரை இதை ஒரு தடுப்பாட்டமாக மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே நமக்கு வெற்றி என்பது தான் உண்மை. இதனை 1971-ம் ஆண்டு நடந்த போரில் அவர்கள் தெரிந்து கொண்டுவிட்டார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் போர் நினைவு சின்னத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் பொன்விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாளில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம்’ என்று கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் 1965-ம் ஆண்டு போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடததக்கது.

மேலும் இதே வெற்றிவிழா சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி முகாமிலும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ராணுவ அதிகாரிகள், பயிற்சி முகாமின் தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் ரவீந்திர பிரதாப் சா கலந்துகொண்டு, போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் 1965-ம் ஆண்டு நடந்த போரின் போது உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ராணுவ அதிகாரிகள் பயிற்சி முகாமில் உள்ள ராணுவ வீரர் நினைவரங்கத்தில் நடந்த இந்த விழாவில், 60 அதிகாரிகள், 180 இளம் பயிற்று அதிகாரிகள், 104 உள்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

English Summary:Winner of the Golden Jubilee of India-Pakistan war. Celebration in Chennai.