பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஜூன் 21ஆம் தேதியை உலக யோகா தினமாக ஐ.நா ஏற்றுக்கொண்டுள்ளது. நாளை மறுநாள், முதலாவது யோகா தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கவுள்ள நிலையில், டெல்லியில் நடைபெறும் பிரமாண்டமான யோகா நிகழ்ச்சியில் பிரதமர் உள்பட முக்கிய வி.ஐ.பிக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில் சென்னையிலும் உலக யோகா தினத்தை சிறப்பாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலக யோகா தினத்தை முன்னிட்டு, சென்னையில் ஈஷா அறக்கட்டளை சார்பில் பிரம்மாண்ட யோகா பயிற்சி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தொடக்கி வைக்கவுள்ளார்.

இது குறித்து ஈஷா அறக்கட்டளை (சென்னை பிரிவு) இயக்குநர் கோபால், ஒருங்கிணைப்பாளர் வித்யா வினோதினி ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றவுள்ள யோகா பயிற்சி முகாம் வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு நடைபெறவுள்ளது. இதை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தொடக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் இதில் நேரடியாக கலந்து கொண்டு யோகா பயிற்சியை வழங்கவுள்ளார். இதில் பொதுமக்கள் இலவசமாக கலந்துகொள்ளலாம்.

உலக யோகா தினத்தையொட்டி ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இலவச யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. சென்னையைப் பொருத்தவரை 800 இடங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்சி வழங்கப்படவுள்ளது.

யோகா தினத்தை முன்னிட்டு முதல் முறையாக 35 ஆயிரம் அடி உயரத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை யோகா பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும் www.yogayoga.org என்ற இணையதளத்தின் மூலம் குறிப்புகளுடன் கூடிய வீடியோ காட்சிகள் மூலம் யோகா பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் ஈஷா வழங்கும் இலவச வகுப்புகளில் யோகா கற்றுக் கொள்ள விரும்புவோர் 83000 11000 என்ற இலவச செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.

English Summary: Yoga day is going to celebrate in YMCA Ground. Central Minister Mr.Venkaiya Naidu starts the function in Chennai.