adyar_river_cleanசமீபத்தில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில், அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவில் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினர் செயலாளர் பணீந்தர ரெட்டி தலைமை தாங்கினார். பள்ளி மாணவிகளுடன், விழாவில் பங்கேற்ற அனைவரும் சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. திட்ட அலுவலர் வி.கலைஅரசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கண்காட்சியை பார்வையிட்ட ராணிமெய்யம்மை பள்ளி மாணவிகளுக்கு வினாடி–வினா போட்டி நடத்தப்பட்டது. மாணவிகள் பிரியதர்ஷினி, மோனிகா ஆகியோருக்கு முதல் பரிசும், 4 மாணவிகளுக்கு ஆறுதல் பரிசும் வழங்கப்பட்டன.

இந்த விழாவின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பணீந்தர ரெட்டி கூறியதாவது: இந்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக 3 நாட்கள் திறந்து வைக்கப்படுகிறது. கூவம் ஆறு சீரமைப்பு பணிகளில் குறிப்பாக பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரும் பணியும், மாநகராட்சி மூலம் குப்பை அகற்றுவதுடன், கழிவுநீர் கலப்பது தடுக்கும் பணியும், சென்னை குடிநீர் துறை சார்பில் கழிவுநீர் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.

அடையாறு ஆற்றில் முதல் கட்ட சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. 2ஆம் கட்டப்பணியும் முன்னேற்றத்தில் உள்ளது. 3ஆம் கட்டப்பணியை நிறைவேற்றுவதற்காக ரூ.900 கோடியில் திட்ட அறிக்கை தயாரித்து, அனுமதிக்காக தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்த உடன் விரைவில் பணிகள் தொடங்கும். இதன் மூலம் நதி சீரமைப்பு, நடைபாதைகள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆண்டு மழைக்கால பிரச்சினைகளை எதிர்கொள்ள அரசின் பல துறைகள் தயாராக உள்ளன.

English Summary : Adyar river revamp project report of Rs 900 crore. Work will begin soon