சென்னை உள்பட நகர்ப்புற பகுதிகளில் வாக்குப் பதிவுக்கு மிகவும் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து வாக்காளர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட உள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளைத் தவிர 232 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது. வாக்களிக்கத் தகுதி பெற்ற 5.77 கோடி பேரில் 4.28 கோடி பேர் வாக்களித்தனர். அதில், ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 74.26 சதவீதம் என தேர்தல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 85.03 சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 60.99 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மொத்த வாக்காளர்களில் 2.86 கோடி ஆண்களாகவும், 2.9 கோடி பேர் பெண்களாகவும் உள்ளனர். இருப்பினும், 2.12 கோடி ஆண்களும், 2.16 கோடி பெண்களும் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். 4,702 மூன்றாம் பாலித்தனவர் வாக்ககளித்த தகுதி பெற்றிருந்தும், 738 பேர் மட்டுமே வாக்களித்தனர்.

சென்னை மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வாக்குப் பதிவு சதவீதம் குறைவாகவே உள்ளது. காஞ்சிபுரத்தில் 68.77 சதவீதமும், திருவள்ளூரில் 71.20 சதவீதமும் பதிவாகியுள்ளன. கோவையில் 68.13 சதவீதமும், மதுரையில் 71.09 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் நகர்ப்புறங்களைக் காட்டிலும், ஊரகப் பகுதிகளில் வாக்குகள் அதிகளவு பதிவாகியுள்ளன. மேலும், மாலை 3 மணிக்கு மேல் பதிவு செய்யப்படும் வாக்குகளின் அளவும் பெருமளவு குறைந்துள்ளது.

இதுகுறித்து, தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: நகரங்களில் வாக்குப் பதிவில் வாக்காளர்கள் பெருமளவு பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட்டன. இருப்பினும், வாக்குப் பதிவு எதிர்பார்த்த அளவைவிடக் குறைந்துள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து ஆராய உள்ளோம். அதன்படி, வாக்காளர்களிடமே வாக்களிக்க இயலாதததற்கான காரணங்கள் குறித்து கருத்துக் கணிப்புகள் நடத்த உள்ளோம். இதன்மூலம், குறைவான வாக்குப் பதிவுக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அவை அடுத்த தேர்தலில் சரிசெய்யப்படும்’ என்று தெரிவித்தார்.

English Summary : Rajesh lakhani announced a survey to find out the reason for low voting percentage in Chennai.