டெல்லியில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள அரவிந்த கெஜ்ரிவால் பல புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தற்போது அரசு அதிகாரிகளுக்கு உதவி செய்ய இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.1.25 லட்சம் உதவித்தொகையாக வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இது குறித்து டெல்லி அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொது மக்களின் பிரச்சினைகளை உயரதிகாரிகள் நேரடியாக அறிய முடிவதில்லை. இந்தக் குறைபாட்டை சரிசெய்வதுடன் துறைகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஒரு யோசனை செய்துள்ளார். இதன்படி பல்வேறு துறைகளில் நன்கு படித்த பட்டதாரி இளைஞர்களை கவுரவப் பதவியில் அமர்த்த அவர் திட்டமிட்டுள்ளார். குறைந்தது ஓர் ஆண்டு காலத்துக்கான இந்தப் பணிக்கு மாத உதவித்தொகையாக ரூ. 1.25 லட்சம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தலைமையிலான உயர்நிலைக் குழு கூட்டத்தில் படித்த இளைஞர்களை அரசு அதிகாரிகளுக்கு உதவுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெல்லி அரசின் நிதி, திட்டம் மற்றும் உள்துறை அமைச்சகங்கள் ஆலோசனை வழங்கும்படி கேட்டுள்ளோம். ஆலோசனைகள் பெற்றபின் இத்திட்டம் அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு அனுமதி பெறப்படும்.

முதல்கட்டமாக 30 இளைஞர்களை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி இளநிலை பட்டமாக இருக்கும். என்றாலும் முதுநிலை மற்றும் சிறப்பு தொழில் கல்விப் பயின்ற வர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இளைஞர்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் உயரதிகாரிகளுக்கு அடித்தட்டு மக்களின் கருத்துகளை கொண்டுவந்து சேர்க்க உள்ளனர். இத்துடன் அரசு இயந்திரத்தின் பணியை சுலபமாக்குவதுடன், காலத்தையும் சேமிக்கும் வகையில் புதிய யோசனைகளை அளிப்பார்கள். ஆம் ஆத்மி அரசின் திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்துகளையும் தொகுத்து வழங்குவார்கள். ஏற்கெனவே அரசு அதிகாரிகளிடம் இருந்து பெறப்படும் கருத்துகளுடன் இந்த இளைஞர்கள் அளிக்கும் கருத்துகள் கெஜ்ரிவால் அரசுக்கு கூடுதல் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

English Summary : Rs. 1.25 lack subsidy for youngsters who help Delhi government officials.