நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, அரசு தொடக்கப் பள்ளிகளில் மட்டும் சுமார் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2018 -ஆம் ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூலை மாதம் வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போது உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்களின் அடிப்படையிலான புள்ளி விபவரங்களின்படி நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளில் 24 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் 10 லட்சம் ஆசிரியர் காலியிடங்கள்: அதிகபட்சமாக அரசுப் பள்ளிகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ள மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் 2,24,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளில் மட்டுமே சுமார் 9 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோன்று உயர்கல்வித்துறையில் 12 ஆயிரத்து 20 இடங்கள் காலியாக உள்ளன.
காவல் துறையில் 5 லட்சம் காலியிடங்கள்: மார்ச் 27-ஆம் தேதி எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல் துறையில் 5 லட்சத்து 40 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆயுதப் படையில் மட்டும் 90 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்திய ரயில்வே மற்றும் சுகாதாரத் துறையில் 4 லட்சம் காலியிடங்கள்: இந்திய ரயில்வேயில் கடந்த பிப்ரவரி மாதம் 89 ஆயிரம் காலியிங்களுக்கான இரண்டு அறிவிப்புகளை அரசு வெளியிட்ட போதிலும், ரயில்வேயில் 2.5 லட்சம் காலியிடங்கள் உள்ளன. மத்திய அரசின் சுகாதாரத்துறையில் மட்டும் மருத்துவர்கள், நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் என சுமார் 1.5 லட்சம் காலியிடங்கள் உள்ளன. உயர்தர சிகிச்சை அளிக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மட்டும் 2 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.
ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகளில் 1.2 லட்சம் காலியிடங்கள்: ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையில் 1.2 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் 61 ஆயிரம் காலியிடங்கள் துணை ராணுவப் படைகளிலும், மற்ற மூன்று ராணுவப் படைகளில் 62 ஆயிரத்துக்கும் அதிகமான காலியிடங்கள் என 1 லட்சத்து 20 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
நீதிமன்றங்களில் 5 ஆயிரம் காலியிடங்கள்: ஜூலை 18-இல் மக்களவையில் எழுப்பட்ட ஒரு கேள்விக்கு, நாடு முழுவதும் நீதிமன்றங்களில், நீதிபதிகள், பதிவாளர்கள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 853 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் முக்கியமான வழக்குகள் தேக்க நிலையில் இருந்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அங்கன்வாடிகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் இடங்களும், தபால் துறையில் 54 ஆயிரத்து 263 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது தெரிய வந்துள்ளது.