பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தற்போது 98 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். இந்த பட்டியலில் சென்னை உள்பட 12 தமிழக நகரங்கள் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் மொத்தம் 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த திட்டத்தில் தமிழகத்தின் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருப்பூர், சேலம், வேலுார், கோவை, மதுரை, ஈரோடு, துாத்துக்குடி ஆகிய 12 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிட்டி ஸ்மார்ட் சிட்டியாக மாறுவதால் என்னென்ன பயன்கள் என்பதை பார்ப்போம்.

1. நகர மக்கள், நாகரிகமாகவும், சுகாதாரமாகவும் வாழ்வதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

2. போக்குவரத்து நெருக்கடி, காற்று மாசு ஆகியவற்றை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

3. வாகனங்களுக்கு மட்டுமல்லாமல், சைக்கிளில் செல்வோர், நடந்து செல்வோர் ஆகியோருக்கு, தனித் தனி வழித்தடங்கள் அமைக்கப்படும்.

4. புதிய பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும்.

5. அனைத்து விதமான போக்குவரத்து வசதிகளும், அதற்கான இணைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

6. சான்றிதழ் பெறுதல், நகராட்சி வரி செலுத்துதல் போன்ற சேவைகளை, நகராட்சி அலுவலகங்களுக்கு செல்லாமல், இணையம் மூலமாகவே பெறும் வசதி ஏற்படுத்தப்படும்.

7. நகரங்களின் சுகாதாரம், கல்வி, கலை, கலாசாரம், விளையாட்டு உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும்

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: ஸ்மார்ட் சிட்டி திட்டம், வெறும் கவர்ச்சிகரமான திட்டமென நினைக்க வேண்டாம். நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை, தரமானதாகவும்,நாகரிகமான அந்தஸ்தை அளிக்கக்கூடிய வகையிலும், இத்திட்டம் இருக்கும். ஸ்மார்ட் சிட்டிகளுக்கு, ஸ்மார்ட்டான மக்கள் தேவை. மத்திய அரசின் கனவை நனவாக்க, மக்களும் ஒத்துழைக்க வேண்டும். அடுத்த, ஆறு ஆண்டுகளுக்குள், இந்த நகரங்களின் மேம்பாட்டுக்காக, மூன்று லட்சம் கோடி ரூபாய் வரை செலவிடப்படும். மொத்தமுள்ள, 98 நகரங்களில், 24 நகரங்கள், தொழில் மற்றும் வர்த்தக நகரங்களாகத் திகழும். 18 நகரங்கள், கலாசாரம் மற்றும் பண்பாட்டு மையங்களாக மாறும்.

English Summary : 12 cities including Chennai chose in Tamil Nadu smart city list.