sivajiதமிழ்த் திரையுலகில் சுமார் அரை நூற்றாண்டுகள் தனது அற்புதமான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்த அபாரமான நடிகர் சிவாஜி கணேசன். கடந்த 1952ஆம் ஆண்டு ‘பராசக்தி’யில் ஆரம்பித்த அவருடைய கலைப் பயணம் 1999ஆம் ஆண்டு வெளிவந்த ‘படையப்பா’ வரை தொடர்ந்தது. கடந்த 2001ஆம் ஆண்டு நம்மை விட்டு நீங்கிய நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னையில் ஒரு மணி மண்டபம் அமைக்கவேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்தன. இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 2002ஆம் ஆண்டு அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்க சென்னை அடையாறு பகுதியில் 65 சென்ட் நிலத்தினை தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கிட 26.9.2002 அன்று உத்தரவிட்டார். இந்த இடத்தில் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செலவில் மணிமண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் தமிழக அரசு நிலம் ஒதுக்கி 13ஆண்டுகள் ஆகிய பின்னரும் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மணிமண்டபம் கட்டவில்லை. இதனால் சிவாஜி ரசிகர்கள் அதிருப்தி அடைந்து இந்த மணிமண்டபத்தை தமிழக அரசே கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தற்போது முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக்கொண்டு விரைவில் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என நேற்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்தபோது, “நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்திட வேண்டுமென பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று சிவாஜி கணேசன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட இடத்தில் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக மணிமண்டபம் அமைக்கப்படும்” என்று கூறிய முதல்வர் தென்னிந்திய நடிகர் சங்கம், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை தாங்களே அமைத்து விடுவோம் என்று தெரிவித்த காரணத்தால் தனது தலைமையிலான அப்போதைய அரசு மணி மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என்றும் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அரசே கட்ட வேண்டும் என்று அப்போதே தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டிருந்தால், அதற்கான உத்தரவையும் தான் அப்போதே வழங்கியிருப்பேன் என்றும் தெரிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

English Summary:Government expenditure for sivaji ganesan manimandapam. Jayalalithaa Announced.