பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்துத் தனித் தேர்வர்களும் இன்று முதல் இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்துத் தனித் தேர்வர்களும் www.tndge.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தனித்தேர்வர்கள் www.tndge.in இணையதளத்துக்குச் சென்று “HIGHER SECONDARY EXAM JUNE/JULY 2015 – PRIVATE CANDIDATE- HALL TICKET PRINT OUT’என்ற வாசகத்தை டைப் அடித்து அதில் தோன்றும் பக்கத்தில் தங்களது மார்ச் 2015 பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்தால், அவர்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். பின்னர் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு, செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்று தேர்ச்சி பெறாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதுடன் எழுத்துத் தேர்வுக்கும் வர வேண்டும்.

அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வர வேண்டும்.

மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரங்களை தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்துகொள்ள வேண்டும்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாத தேர்வர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

English Summary: +2 Special Exams Hall Tickets released, Downloaded through Internet.