சென்னை நகரில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த 23 காவல்துறை உதவி ஆணையர்கள் நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தேர்தல் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடமாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் காவல் துறை உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும்படி தேர்தல் ஆணையம் அண்மையில் தமிழக காவல் துறைக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில், சென்னை பெருநகரக் காவல் துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த 23 உதவி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. அசோக்குமார் நேற்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின்படி மயிலாப்பூர் ரவிசேகரன் கிண்டிக்கும், அடையாறு ஏ.முருகேசன் மத்திய குற்றப்பிரிவுக்கும், திருவல்லிக்கேணி எம். பீர்முகம்மது மது விலக்கு பிரிவுக்கும், வேப்பேரி அய்யப்பன் பூந்தமல்லிக்கும், மாதவரம் ஜி. சங்கரலிங்கம் கிண்டிக்கும், கிண்டி நந்தக்குமார் ஆவடிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் அனைவரும் இன்னும் ஓரிரு நாள்களில் புதிய இடங்களில் தங்களது பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

English Summary : 23 Assistant Commissioners from Chennai are transferred in same day.