சென்னை அருகேயுள்ள முக்கிய சுற்றுலா பகுதியான மாமல்லபுரம் பாரம்பரிய தொல்பொருள் சின்னங்களுக்கான, பார்வையாளர் நுழைவுக் கட்டணத்தை, இரு மடங்காக உயர்த்த, மத்திய தொல்லியல் துறை முடிவு செய்திருப்பதாகவும் இதுகுறித்த பரிந்துரை ஒன்று மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.ல்

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட தற்போது இந்தியர்களுக்கு தலா 10 ரூபாயும், வெளிநாட்டினருக்கு 250 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது. தொல்பொருள் சின்ன வளாக நுழைவாயிலில் இந்த நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தொல்லியல் துறையின் இணையதளத்தில், மின்னணு முறையில் நுழைவுச் சீட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 1996ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட இந்த கட்டணத்தை தற்போது உயர்த்த, மத்திய தொல்லியல் துறை முடிவெடுத்து உள்ளது. தொல்லியல் துறை, மத்திய கலாசார துறையின் கீழ் உள்ளதால், அந்த துறை, கட்டணத்தை உயர்த்துவது குறித்து, மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் மாமல்லபுரத்தில் இந்தியர்களுக்கு ரூ.20ம், வெளிநாட்டவர்களுக்கு ரூ.500ம் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”தொல்லியல் துறையில் மட்டுமே, கட்டணத்தை உயர்த்தாமல், துவக்க கால கட்டணத்தையே வசூலித்து வருகிறோம்,” என்றார்.மேலும், ”பிற துறைகளின் கட்டணம், பல மடங்கு உயர்ந்த நிலையில், நாங்களும் அதுபற்றி பரிசீலித்து, அரசிடம் பரிந்துரைத்து உள்ளோம். அரசின் முடிவின்படி செயல்படுவோம்,” என்று கூறினார்.

இதுகுறித்து, மாமல்லபுரத்திற்கு சுற்றுலாவுக்கு வரும் பயணிகள் கூறியபோது, ”குடும்பமாகவோ அல்லது குழுவாகவோ வருபவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று கூறியுள்ளனர்.

English Summary : Mahabalipuram doubles entry fee for both Indians(Rs.10 to Rs.20) and foreigners(Rs.250 to Rs.500).