voterscardதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதில் தேர்தல் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அடுத்தகட்டமாக வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதற்காக சென்னையில் மூன்று சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்குமாறு பொதுமக்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதையடுத்து வண்ண வாக்காளர் அடையாள அட்டையை விரைவாக வழங்குவதற்காக சென்னை மாவட்டத்தில் 3 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வடசென்னை வாக்காளர்களுக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திலும், மத்திய சென்னை பகுதி வாக்காளர்களுக்கு மண்டலம்-8, சென்னை மாநகராட்சி அலுவலகம், பழைய கதவு எண்.12பி, புதிய கதவு எண் 36பி, புல்லா அவென்யூ, ஷெனாய் நகர் மற்றும் தென்சென்னை வாக்காளர்களுக்கு மண்டலம்-13, சென்னை மாநகராட்சி அலுவலகம், கதவு எண்.115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரியில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று மையங்கள் தவிர சென்னையில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இவை வழங்கப்படும். பொதுமக்கள் ரூ.25 செலுத்தி 001டி என்ற விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அளித்தால் 3 நாட்களுக்குள் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும்.

இவ்வாறு அந்த  செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: 3 specialized centers in Chennai to provide Color identity cards.